Wednesday, March 22, 2017

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு....

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு: ஓசூர் மாணவருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், புதிய கண்டுபிடிப்புக்காக ஓசூர் மாணவர் ஆகாஷ் மனோஜை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டினார். அடுத்தபடம் : மாரடைப்பு ஏற்படப்போவதை கண்டுபிடிக்கும் கருவி.

ஓசூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு ‘ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருது வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவுரவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ்(15). இவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரின் சாதனையை பாராட்டி கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில், ‘ராஷ்டிரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்துள்ளார்.
இதுகுறித்து ஓசூரில் மாணவர் ஆகாஷ் மனோஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் ஓசூர் அசோக் லேலாண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிப் படிப்பில் முதல் மாணவனாக திகழும் எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்து வந்தது. பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் எனது அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கு பரிசும் விருதுகளும் பெற்று வருகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் எனது தாத்தா உயிரிழந்தார். இது என்னை மிகவும் பாதித்தது. மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் சிகிச்சை அளித்து தாத்தாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்ற எண்ணமே எனது புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது.

கடந்த 2 ஆண்டுகளாக ஆராய்ந்து மாரடைப்பு ஏற்படுவதை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளேன்.

சுமார் 15 முதல் 20 கிராம் எடையுள்ளது இந்த கருவி. மாரடைப்பு ஆபத்து உள்ள நோயாளி இந்த கருவியை கைக்கடிகாரம் போன்று இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை இந்த கருவி 6 மணி நேரத்துக்கு முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் எச்சரிக்கையடைந்து இருதய நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்த கருவியின் செயல்பாடுகள் பரிசோதனை செய்யப்பட்டு விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பல்ராம் பாகவா மற்றும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இதன் செயல்பாடுகள் சான்றளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்த கருவியை தயாரித்து அனைவரும் வாங்கி பயனடையும் வகையில் குறைந்த விலையாக ரூ.900-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள் ளோம். 2018-ம் ஆண்டு இறுதியில் இருந்து இந்த கருவி விற்பனைக்கு வர உள்ளது.

விருது வழங்கும் விழாவின்போது, இந்த கருவியை கண்டுபிடித்ததன் மூலமாக உண்மையில் மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் என்னைப் பாராட்டினார். பிரதமர் மோடியும் எனது கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ந்து பாராட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment